Wednesday, 6 August 2014

நமது கல்லூரி முதல்வர் தமிழறிஞர் முனைவர் மு.அருணகிரி அவர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா 05.08.14



நமது கல்லூரி முதல்வர் தமிழறிஞர் முனைவர் மு.அருணகிரி 
அவர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா 05.08.14



தமிழிசைச் சங்கம் சார்பில், ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் பொற்கிழி, தமிழறிஞர் மு.அருணகிரிக்கு வழங்கப்பட்டது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசைச் சங்கம் சார்பில் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியாரின் 110 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், மதுரை ஆயிரவைசியர் கல்லூரி முதல்வரும் தமிழறிஞருமான மு.அருணகிரிக்கு பொற்கிழி விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன். அதற்கான பாராட்டுப் பத்திரத்தை தமிழிசைச் சங்க அறங்காவலர் எஸ்.மோகன்காந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மு.அருணகிரி பேசியது:







பொற்கிழி வழங்கி தமிழறிஞர்களை ராஜா சர் முத்தையா செட்டியார் குடும்பம் ஊக்கப்படுத்துகிறது. அண்ணாமலை செட்டியார், அழகப்பச் செட்டியார், கருத்துமுத்து தியாகராச செட்டியார் ஆகியோரின் குடும்பங்கள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் தமிழை வளர்க்க பெரும் உதவி புரிந்துள்ளன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர்களைப் பணியமர்த்தியவர் ராஜா சர் முத்தையா செட்டியார். தமிழிசையைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக தமிழிசைச் சங்கத்தை அவர் தொடங்கினார். இசையுடன் படித்தால் தாய்மொழியை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதில் உறுதியாக இருந்தவர். ராமாயணத்தை கற்றுக் கொள்ளச் சென்றபோது தடுக்கப்பட்ட குயவர் இன பெண், எளிய நடையில் தெலுங்கு மொழியில் ராமாயணத்தை படைத்தார். தமிழ் மொழியை எழுதும்போது உரக்கச்சொல்லிப் படிக்கும் வழக்கம் கொண்டவர் உ.வே.சா. அவரது இந்தச் செயல் பலரை தமிழின் பால் ஈர்த்தது. இது போன்ற விஷயங்கள் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு தமிழை வளர்க்க உந்துதலாக இருந்தன என்றார்.

விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, உலகத் திருக்குறள் பேரவை நிறுவனர் மணிமொழியன், தமிழறிஞர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி :தினமணி நாளிதழ்